எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் தர்ணா

ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-16 18:10 GMT
பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் 74 ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் பணி செய்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 8-ந் தேதி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். இதில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க தலைவர் வாணிதாசன், பொருளாளர் தேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்