விளையாட்டு பயிற்சி பெற வீரர்கள் தேர்வு 21 22 ந்தேதிகளில் நடக்கிறது

விளையாட்டு பயிற்சி பெற வீரர்கள் தேர்வு 21, 22-ந்தேதிகளில் நடக்கிறது.

Update: 2022-03-16 16:22 GMT
புதுச்சேரி
விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வீரர்கள் தேர்வு 21, 22-ந்தேதிகளில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதுச்சேரி மைய பொறுப்பாளர் விட்டல்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைப்பந்து வீரர்கள் தேர்வு

இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் (பயிற்சி மையத்தில் தங்கி இருந்து பயிற்சி பெறுதல் மற்றும் வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுதல்) திட்டத்தில் கைப்பந்து (ஆண்கள்-தங்கி இருந்து பயிற்சி பெறுதல்) தேக்வாண்டோ விளையாட்டுகளில் (ஆண் மற்றும் பெண்-வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுதல்) சிறப்பு பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான வயது வரம்பு 12 முதல் 18 வரை ஆகும்.
கைப்பந்து வீரர்கள் தேர்வு வருகிற 21-ந்தேதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேக்வாண்டோ வீரர்கள் தேர்வு 22-ந்தேதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும். 

தேசிய அளவிலான போட்டி

தேசிய அளவிலான போட்டி, மண்டலங்களுக்கு இடையேயான போட்டி, மாநில அளவிலான போட்டிகளில் முதல், 2-ம், 3-ம் இடம் பெற்றவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவர்.  தனி நபர் விளையாட்டு போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் அந்த குறிப்பிட்ட விளையாட்டிற்கு நேரடியாக முன்னுரிமை கொடுக்கப்பட்டு வயது மற்றும் மருத்துவ தகுதி சோதனைக்குப்பின் பயிற்சி மைய தேவைக்கேற்ப சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குழுபோட்டி விளையாட்டுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்தவர்கள் தேர்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள். வயது மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பின் சேர்க்கைக்கு தகுதி பெறுவர்.

உயரமான மாணவர்கள்

உயரமான மாணவர்கள் கைப்பந்து விளையாட்டுக்கு சிறப்பு தகுதி வாய்ந்தவர்களாக முன்னுரிமை அளிக்கப்படும். இவர்கள் சேர்க்கைக்கு முன்பு 3 வாரங்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டும். 
14 வயது ஆண்கள் 165 செ.மீ. உயரமும், 16 வயதினர் 175 செ.மீ. உயரமும், 16 வயதுக்கு மேல் 182 செ.மீ. உயரமும் இருக்கவேண்டும். பெண்கள் 14 வயதுக்கு   மேல் 160 செ.மீட்டரும், 16 வயதுக்கு மேல் 165 செ.மீட்டரும், 16 வயதுக்கு மேல் 170 செ.மீட்டரும் இருக்கவேண்டும்.
பயிற்சி விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெறுவோர், வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுவோருக்கு ஒரு வருடத்துக்கான விளையாட்டு சீருடை, உபகரணங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும்.

இன்று முதல் விண்ணப்பம்

இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிமுதல் 19-ந்தேதி மாலை 4 மணிவரை அலுவலக நேரங்களில் விண்ணப்பங்கள் பெறலாம். தேர்வுக்கு வரும் விளையாட்டு வீரர்கள் தங்களின் 3 புகைப்படம், அசல் மற்றும் நகல், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (ரேசன் கார்டு, ஆதார் கார்டு), கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களுடன் அரசு மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழுடன் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்கு ஒப்படைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்