வேதா இல்லத்திற்காக அரசு செலுத்திய தொகை - வட்டியுடன் திருப்பி ஒப்படைப்பு

வேதா இல்லத்திற்காக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் வைப்புத்தொகை வட்டியுடன் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பபட்டுள்ளது.

Update: 2022-03-16 13:37 GMT
சென்னை,

போயஸ் தோட்டத்தில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவிடமாக மாற்றுவதற்கான அறிவிப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்டது. அதற்காக வேதா இல்லத்தை கையகப்படுத்தும் விதமாக, அந்த இடத்திற்கான மதிப்பீட்டு தொகையை நிர்ணயித்து 68 கோடி ரூபாயை தமிழக அரசு கோர்ட்டில் டெபாசிட் செய்திருந்தது. 

இதற்கிடையில் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும் கையகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்தும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

தனி நீதிபதி பிறப்பித்த அந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில் வேதா இல்லம் தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், வேதா இல்லத்திற்காக தமிழக அரசு செலுத்திய தொகையை திரும்ப பெறவும், அதனை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து அந்த தொகையை திருப்பி செலுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த தொகை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ரூபாயாக சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்