12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-16 13:20 GMT
புதுச்சேரி
12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி

புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி போடப்படுகிறது.
அதேபோல் 15 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் கோவேக்சின் என்ற தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது.

ரங்கசாமி தொடங்கி வைத்தார்

இதன் தொடக்க நிகழ்ச்சி புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து ‘கார்பிவேக்ஸ்’ என்ற தடுப்பூசி மாணவிகளுக்கு போடப்பட்டது.
நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, சுகாதாரத்துறை அதிகாரிகள் முரளி, ராஜாம்பாள். கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பள்ளியின் துணை முதல்வர் கோகிலாம்பாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

54 ஆயிரம் டோஸ்

இந்த தடுப்பூசியை பள்ளிகள் தோறும் சென்று மாணவ, மாணவிகளுக்கு செலுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு செலுத்தும் விதமாக 54 ஆயிரம் டோஸ் ‘கார்பிவேக்ஸ்’ தடுப்பூசி புதுச்சேரிக்கு வந்துள்ளது. 2008 ஜனவரி முதல் 2010 டிசம்பர் மாதம் வரை பிறந்தவர்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி போடுவதை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

2-வது தவணை

தற்போது 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மாணவர்களுக்கு செலுத்த தேவையான தடுப்பூசி மருந்துகள் நம்மிடம் உள்ளது.
ஏற்கனவே 15 வயது முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அவர்களில் 2-வது தவணை செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் எப்போது?

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், சட்டமன்றம் எப்போது கூடுகிறது? முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? அல்லது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, சட்டமன்றம் கூடும்போது அதுகுறித்த விவரங்கள் தெரியவரும் என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்