குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறு சுமை தூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்த சுமை தூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி தவளகுப்பம் ராஜீவ்காந்தி நகர், வீனஸ்டிக் வீதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). பெரிய மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தார். சாராயம் குடிக்கும் பழக்கம் உடைய இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று சாராயம் குடிக்க மனைவியிடம் பணம் கேட்டதாகவும் அவர் தர மறுத்ததால் சண்டை போட்டு விட்டு சேகர் வெளியே சென்றதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் குடிபோதையில் வந்த சேகர் வீட்டுக்குள் சென்று அறை கதவை பூட்டிக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவி மாலதி
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேகரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சேகர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.