சென்னை அண்ணாநகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து
சென்னை அண்ணாநகரில் தனியார் வங்கி மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூவில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தனியார் வங்கியும், மற்ற தளங்களில் பல ஐடி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், 10 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழ் தளத்தில் இருக்க கூடிய வங்கியில் இருந்துதான் தீ பற்றியதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக, மின் கசிவு மூலமாக, தீ பரவியிருக்கும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடன் பெரும்பாலானவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறிய நிலையில், ஊழியர்கள் யாரேனும் தீ விபத்தில் சிக்கியிருந்தால், அவர்களை மீட்கவும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.