தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது..!

12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-03-16 09:11 GMT
சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதுவரை தமிழகத்தில, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 33 லட்சத்து 8 ஆயிரத்து 622 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் (91.92 சதவீதம்), 4 கோடியே 31 லட்சத்து 26,914 பேருக்கு 2-வது தவணை (74.54 சதவீதம்) தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 28 லட்சத்து 14,175 பேருக்கு முதல் தவணையும் (84 சதவீதம்), 18 லட்சத்து 67,576 பேருக்கு 2-வது தவணை (56 சதவீதம்) தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சத்து 3 ஆயிரத்து 293 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு  சில நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கோர்பேவேக்ஸ் தடுப்பூசி 2 தவணைகளாக செலுத்தப்படும். முதல் தவணைக்கும் 2-வது தவணைக்கும் இடையில் 28 நாட்கள் கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்படும். 12 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்