முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனை நடத்தியதற்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-03-15 22:08 GMT
சென்னை,

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழிவாங்கும் நடவடிக்கைகள்

மக்களுக்கு தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அ.தி.மு.க.வின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன்நிற்க இயலாத தி.மு.க. அரசு, தனது தோல்விகளை மறைக்க, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும், மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், கட்சியின் அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் களங்கத்தை அள்ளி வீசும் கண்ணிய குறைவான நடவடிக்கையில் தி.மு.க. அரசு இறங்கியது.

தற்போது மீண்டும் வேலுமணியை குறிவைத்தும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராமை குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க. அரசின் உள்நோக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நம்பிக்கை நட்சத்திரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் வேலுமணி துடிப்புடன் செயல்பட்டு கட்சிப்பணிகள் ஆற்றியதை பொறுத்துக்கொள்ள இயலாமல், தற்போது அவர் மீது குறிவைத்து தாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்களில்தி.மு.க.வினரின் ஆள்தூக்கி நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும், வீரத்துடன் எதிர்த்து போராடிய வேலுமணியை முடக்கிப்போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றது என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் நன்கு அறிவார்கள்.

வேலுமணி ஆயிரம் சோதனைகள் வந்தாலும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர். அ.தி.மு.க.வின் உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவரான வேலுமணி, தி.மு.க. அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறிதும் தொய்வடைந்துவிடமாட்டார்; அவருடைய கட்சி பணிகளும், மக்கள் தொண்டும் தொய்வில்லாமல் தொடரும் என்பதை கட்சி தொண்டர்களும், கோவை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள். தி.மு.க. அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து, அ.தி.மு.க. சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றது; இனியும் விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்