முதுநிலை மருத்துவ படிப்பு இறுதிகட்ட கலந்தாய்வுக்கு கட் ஆப் மதிப்பெண் குறைப்பு சென்டாக் அறிவிப்பு

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-03-15 18:05 GMT
புதுச்சேரி
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு

புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி. எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பபட்டு வருகிறது. ஏற்கனவே 2-ம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற மாணவர்கள் கடந்த 12-ந் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேர்ந்தனர். இதற்கிடையே மத்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு

அதன்படி நீட் நுழைவுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 35 சதவீதம் (247 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். இதேபோல் எஸ்.சி., எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 25 சதவீதம் (210 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் 30 சதவீதம் (229 மதிப்பெண்கள்) பெற்றால் போதும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் வருகிற 18-ந் தேதி வரை சென்டாக் இணைய தளத்தில் (www.centacpuducherry.in) சென்று பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.
மேற்கண்ட தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்