திண்டுக்கல்: போன் பேச தராததால் தங்கையை வெட்டிக்கொன்ற அக்கா கைது..!

திண்டுக்கல் அருகே மகனுடன் பேசுவதற்கு செல்போன் தராததால் தூங்கிக்கொண்டிருந்த தங்கையை வெட்டிக்கொலை செய்த அக்காவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-15 03:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரைச் சேர்ந்த தமிழ்செல்வி(43) இவர் இதே ஊரில் உள்ள நூலகத்தில் துப்புரவுப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தங்கவேல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இதே ஊரில் உள்ள தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தமிழ்செல்வியின் உடன் பிறந்த அக்கா வெங்கடேஷ்வரி (46) இவரது கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகன் நாகமணிகண்டன் கோயமுத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு தனது தாயார் பழனியம்மாள், வெங்கடேஷ்வரி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் தனியாக தூங்கி கொண்டிருந்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை (15.3.2022) சுமார் 4 மணிக்கு வெங்கடேஷ்வரி எழுந்து தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை தட்டி எழுப்பி எனது மகன் நாகமணிகண்டனிடம் பேசவேண்டும் செல்போனில் போன் செய்து கொடு என்று கூறியுள்ளார்.

தூக்க கலக்கத்தில் இருந்த தமிழ்செல்வி காலையில் போன் செய்துகொள்ளலாம் என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ்வரி வீட்டில் காய்கனி நறுக்க வைத்திருக்கும் அரிவாள்மனையை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை சரமரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதன் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து வெங்கடேஷ்வரி என் தங்கயை கொன்றுவிட்டேன் என்று சத்தம் போட்டுள்ளார். இதை கேட்ட ஊர் மக்கள் திடுக்கிட்டு எழுந்து கூட்டமாக ஓடி வந்து பார்த்தபோது தமிழ்செல்வி இறந்து கிடந்தது தெரிந்தது.

இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வியை வெட்டிகொன்ற அக்கா வெங்கடேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடன் பிறந்த தங்கையை அக்காவே அரிவாள்மனையால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்