ரவுடி என்ற பெயரில் மதுக்கடையில் ஓசியில் சரக்கு கேட்டால் கொடுக்க கூடாது

ரவுடி என்ற பெயரில் மதுக்கடையில் ஓசியில் சரக்கு கேட்டால் கொடுக்கக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-13 18:00 GMT
ரவுடி என்ற பெயரில் மதுக்கடையில் ஓசியில் சரக்கு கேட்டால் கொடுக்கக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மதுக்கடை மற்றும், சாராய கடை உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பாகூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-
பல குற்றச் சம்பவங்கள் மதுக்கடை, சாராய கடையில் தொடங்கி கலவரமாக மாறுகிறது. கொலை, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க மதுக்கடையில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
ரவுடி என்ற பெயரில் ஓசியில் சரக்கு கேட்பவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மதுபானம் வழங்கினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிறார் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். சந்தேகப்படும் படியாக அதிகமாக சரக்கு வாங்கி செல்பவர்களிடம் விபரத்தை கேட்டு வாங்க வேண்டும். 
போலீசுக்கு தகவல்
மதுக்கடையில் பிரச்சினை ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். வெளியூரிலிருந்து குடிக்க வருபவர்களுக்கு அதிகமான மதுபானங்களை கொடுக்கக்கூடாது. வெளியூர்காரர்கள் சந்தேகப்படும்படி வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மதுக்கடை ஊழியர்கள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்