நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்...!
திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அர்ச்சனா என்ற மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி அர்ச்சனா நேற்று மதியம் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இது தொடர்பான மாணவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இன்று காலை பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் மாணவி அர்ச்சனாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
ஆனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவி அர்ச்சனாவின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை அருள் செல்வியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் மாணவின் தாயார் சந்தனமாரி உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தின் முன்பு உள்ள வேலூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உறவினர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தாருங்கள் என்று போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு போலீஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.