கொழுமம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ; 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் எரிந்து சேதம்
கொழுமம் வனப்பகுதி செங்குத்தாக இருப்பதால் வனப்பணியாளர்கள் சென்று தீயை அணைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தோகைவரை வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கடும் வெப்பத்தின் காரணமாக மரம், செடி கொடிகள் காய்ந்து ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட கொழுமத்தில் நேற்று இரவு முதல் காட்டு தீ எரிந்து வருகிறது.
இதனால் கொழுமம் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமாகியுள்ளது. மேலும் இந்த கொழுமம் வனப்பகுதி செங்குத்தாக இருப்பதால் வனப்பணியாளர்கள் சென்று தீயை அணைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் அட்டுவம்பட்டி, கோம்பை, பள்ளங்கி உள்ளிட்ட தனியார் தோட்டப்பகுதிகளில் காட்டு தீ எரிந்து வருவதால் விவசாயிகளே காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காட்டு தீ எரிந்து வருவதால் கொழுமம் வனப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.