திருச்சி: காதல் கணவர் எட்டி உதைத்ததால் மனைவி வயிற்றில் இருந்த சிசு சாவு

திருச்சி அருகே மனைவி வயிற்றில் கணவன் எட்டி உதைத்ததில் கருவில் இருந்த சிசு கலைந்தது.

Update: 2022-03-13 08:00 GMT
திருச்சி, 

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (30). இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேனகா தேவி (29). இந்த தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொட்டப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது மேனகா தேவி இரண்டாவதாக கருவுற்றிருந்தார்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. சம்பவத்தன்று தகராறு முற்றிய நிலையில் ரவிக்குமார் அவரது மனைவி மேனகா தேவியை வயிற்றில் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மயங்கிய நிலையில் கீழே விழுந்த மேனகா தேவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மேனகா தேவி பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து சிசுவை கொன்ற கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். .

மேலும் செய்திகள்