புதுக்கோட்டை: பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்..!

புதுக்கோட்டை அருகே குளிக்க சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-13 05:18 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசெந்தில். இவரது மகன் சந்தோஷ் (13). இவர் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்

இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள பெத்தாரி குளத்திற்கு சந்தோஷ் மற்றும் நண்பர்கள் குளிக்க சென்றனர். அந்த குளத்தில் அங்காங்கே குழி தோண்டி வண்டல் மண் எடுக்கப்பட்டு இருந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் சந்தோஷ் அப்பகுதிக்கு சென்று குளிக்கும் போது ஆழத்தில் மூழ்கி மூச்சு திணறியுள்ளார்.

இதைகண்ட அப்பகுதி இளைஞர்கள் சந்தோஷை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தார். இறந்த மாணவனின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இப்பகுதியில் உள்ள குளங்களில் திருட்டுத்தனமாக மண் சுரண்டப்படுவதால் பள்ளங்கள் மற்றும் ஆழக்குழிகள் நிறைந்துள்ளன. எனவே மணல் கடத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மழைக்காலங்களில் மழை பெய்து குளங்களில் நீர் வரத்து அதிகமாக இருப்பதினால் பள்ளங்கள் தெரியாமல் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் இச்சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதை அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மாணவனின் மரணம் குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்