கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
வாரவிடுமுறையில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகளால் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சி.
கொடைக்கானல்,
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக, வார இறுதிநாட்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள் சவாரி, குதிரைச்சவாரி செய்து மகிழ்ந்தனர். படகுக்குழாம் பகுதியில் படகு சவாரி செய்வதற்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரமிப்பால் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்பவர்கள், ஏரிச்சாலை நடைமேடைப்பகுதியில் நின்று ஏரியை ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ்சாலையில் கடை அமைத்து வியாபாரம் செய்பவர்களின் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலைவிபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து சுற்றுலாப்பயணிகள் நெடுஞ்சாலைகளில் விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.