அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! உறவினர்கள் சாலை மறியல்..!

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-13 04:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சீத்தாராம்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் தச்சுத் தொழில் செய்து வரும் சங்கர் (45). இவரது மனைவி சந்தனமாரி (35). இவர்களுக்கு ஒரு மகனுக்கும் மகளும் உள்ளனர். இவர்களது மகள் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் வகுப்பறையில் இருந்து வாந்தி வருவதாக கூறி சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மாற்றுத் திறனாளிகள் செல்ல அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தின் கைப்பிடி மீது மாணவி விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு ஆசிரியர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

சாலை மறியல்

இந்த நிலையில் பள்ளியில் வேலை பார்க்கும் தமிழாசிரியை அருள்செல்வி என்பவர்  செய்யாத தவறுக்காக திட்டியதாலும், லீடர் பொறுப்பில் நீக்கியதாலும் மனமுடைந்தால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை குறித்து எழுதி வைத்திருந்த கடிதத்தை கிழித்தெறிந்து விட்டதாகவும், ஆசிரியை அருள் செல்வியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பாஜக கட்சியினர் என சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாகூர் தகவலறிந்து அதிரடிப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும், எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

ஆனாலும் கூட்டத்தினர் கலையாமல் இருந்ததால் அதிரடிப்படையினர் கூட்டத்தை கலைத்தனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவிகளின் பிரச்சனை குறித்து புகார்

இதனைத் தொடர்ந்து திரண்டு நின்ற கூட்டத்தினர் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தின் முன் வந்து சேர்ந்தனர். 

இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் வேறு ஒரு மாணவியின் தாயார் பானுப்பிரியா இறந்து போன மாணவியைப் போலவே தங்களுடைய மாணவிகளும் கழிவறை மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். 

இதனால் ஆசிரியர்களின் கழிவறைய பயன்படுத்தியதற்காக மாணவிகளை திட்டியதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் நிலையத்தை விட்டு செல்ல மாட்டோம் எனவும் கூறினார்.




மேலும் செய்திகள்