சென்னையில் 2 மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று திறப்பு..!!

திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் இயக்கப்படுகிறது.

Update: 2022-03-13 03:01 GMT
கோப்புப்படம்
சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார்.

இந்நிலையில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டம்-ன் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை (9 கி.மீ) பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிவுற்றது. இதனையடுத்து மெட்ரோ ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், அவ்விரு மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. இதன்படி இந்த இரு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருவொற்றியூர், விம்கோ நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் பொதுமக்கள், மேற்கண்ட ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் சேவையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இம்மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம். 

சென்னை மெட்ரோ ரெயில்களில் சேவைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இம்மாதம் 11.03.2022-ஆம் தேதி மட்டும் 2 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 7 ஆண்டு பூர்த்தி அடைந்து பயணிகளுக்கான பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்கம் திட்டம் நிறைவேற்றி 54.41 கி.மீ தூரத்திற்கு அதன் இயக்கம் தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
 
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவே இருக்கும். இந்த மைல் கல்லையும் தாண்டி புதிய சாதனை படைக்க சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். இந்த சாதனை தொடர ரெயில் பயணிகளின் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும் செய்திகள்