பசுமை சூழலை உருவாக்குவது வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

பசுமை சூழலை உருவாக்குவது, வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-03-13 00:23 GMT
தராசின் இரு தட்டுகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நேற்று நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாநில முன்னேற்றத்திற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதுபோல சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என்று நான் உளமார நம்புகிறேன்.

தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே அரசு கருதுகிறது. இன்று புவி வெப்பமாகுதல் நாட்டு அளவில் அல்ல, உலக அளவில் அதிகமாக பேசப்படுகிறது. அதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது. வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச்சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.

மீண்டும் மஞ்சப்பை

என்னை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, சுற்றுச்சூழலை மனதில் வைத்துக்கொண்டு அப்போதே நாங்கள் மரக்கன்றுகளை நட்டோம். அதை மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்கின்ற பெயரை இதற்காக சூட்டினோம்.

அத்துடன் நிற்காமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

சம நண்பர்கள்

இப்போது முதல் முறையாக மாவட்ட கலெக்டர்களோடு சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டையும் நடத்தி கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கை-2020 குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, தொழில், சுற்றுச்சூழல் இரண்டும் சமுதாயத்தினுடைய சம நண்பர்கள் என்ற அளவிலே முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, தொழில் துவங்க அனுமதிக்கப்படும் அனுமதிகளை இன்னும் விரைவுபடுத்தும் ஆலோசனை களை நீங்கள் இங்கே வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்