நிலத்தரகர் கொலை வழக்கில் கைதான பெண் வீட்டுக்கு தீவைப்பு

நெல்லை அருகே நிலத்தரகர் கொலை வழக்கில் கைதான பெண் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-12 23:25 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 45). நிலத்தரகரான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகுண்டம் அருகில் உள்ள பாளையங்கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரை கொல்ல முயன்ற வழக்கில் வைகுண்டம் கோர்ட்டில் ஆதரவாக சாட்சி சொல்ல இருந்தார். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் வைகுண்டம் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக செட்டிகுளத்தை சேர்ந்த ராஜன் (67), அவருடைய மனைவி லீலா (58), இவருடைய தங்கை ஜாக்குலின் தேவதாஸ் (56) மற்றும் ராஜன் திரவியம் மகன் பாபு (38) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ராஜன் மகன்கள் செல்வராஜ், பிரபாகரன் மற்றும் தேவதாஸ் மகன்கள் பிலிப், ஆண்ட்ரு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். செட்டிகுளம் பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஜாக்குலின் வீட்டில் இருந்து நேற்று காலை திடீரென்று புகை வெளியேறியது. பின்னர் வீட்டுக்குள் தீப்பற்றி எரிந்தது.

அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

பாளையஞ்செட்டிகுளத்தில் முன்பு அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோல் ஜாக்குலின் வீட்டிற்குள் பின்பக்க கதவை உடைத்து நுழைந்த மர்மநபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி சென்று உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


மேலும் செய்திகள்