கச்சத்தீவு விழாவில் இருநாட்டு மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனை
கச்சத்தீவு திருவிழாவில் எந்த பாதிப்பும் இன்றி மீன்பிடி தொழில் நடக்க வேண்டி, இருநாட்டு மீனவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள், தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை ராமேசுவரம் மீனவர்களிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்தோணியார் ஆலய திருவிழா
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்திற்கு பின்னர் முதல் நாள் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 2-வது நாளான நேற்று காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜெயரத்தினம் தலைமையில் நடந்த இந்த சிறப்பு திருப்பலியில் இருநாட்டு மீனவர்களும் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க வேண்டுமெனவும் இயற்கை சீற்றங்களால் கடல் தொழிலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இலங்கை நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தம், ராமேசுவரம் பங்குத்தந்தை தேவசகாயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி ராகேஷ் நடராஜ், வட மாகாண கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன் உள்பட இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக பக்தர்கள் திரும்பினர்
பின்னர் நேற்று பகல் 11 மணி அளவில் அங்கிருந்து ராமேசுவரத்தை சேர்ந்த 76 பேர், 4 படகுகளில் புறப்பட்டு பகல் 3 மணி அளவில் மீண்டும் ராமேசுவரம் திரும்பினர். துறைமுகப் பகுதியில் வந்திறங்கிய அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்த பின்னரே அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்தனர்.
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு ராமேசுவரம் திரும்பிய பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறுகையில், “கச்சத்தீவு விழாவில் இருநாடுகளின் மீனவர்களும் சந்தித்து கலந்துரையாடினோம். இருநாடுகளுடைய பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்தகட்டமாக பேசுவதற்கு மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி உடனடியாக ஏற்பாடு செய்து, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்” என்றார்.
இலங்கை மீனவர்கள் அனுப்பி கோரிக்கை மனு
கச்சத்தீவு விழாவின் போது ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகளிடம், இலங்கை மீனவர்கள் தரப்பில், மீன்பிடி தொழிலில் தங்கள் தரப்பு பிரச்சினைகளை கூறி, அதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனுவையும் கொடுத்து அனுப்பி உள்ளனர். ராேமசுவரம் வந்திறங்கிய மீனவர்கள் அந்த கோரிக்கை மனுவை மீனவளத்துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் காட்டினர். இலங்கை மீனவர்கள் கொடுத்த மனுவை, தபால் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் ெதரிவித்தனர்.