மச்சூர் வனப்பகுதியில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டு தீ...!

கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக காட்டு தீ பற்றி எரிந்து வருகின்றது.

Update: 2022-03-12 16:30 GMT
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெப்பம் அதிகரித்தும், மாலை வேளையில் கடும் குளிரும் நிலவி வருகிறது,

இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடி கொடிகள், மரங்கள், புதர்கள் காய்ந்து அவ்வப்போது தீ பற்றி எரிந்து வருகிறது. 

அந்த வகையில் கொடைக்கானல்  அருகே உள்ள மச்சூர் வனப்பகுதிக்கு உட்பட்ட தோகைவரை என்ற வனப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கடந்த இரண்டு நாட்களாக தீ கொழுந்து விட்டு எரிந்து வந்தது. இந்த தீயை வனத்துறையினர் நேற்று மாலை வேளையில் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இந்த நிலையில் தோகைவரை மலை உச்சிப்பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரென தீ பற்றியது. இந்த தீ விபத்தால் மச்சூர் வனப்பகுதிக்கு தொடர்ந்து 3-வது நாளாக காட்டு  தீ ஏரிந்து வருகின்றது.

இந்த காட்டு தீ தொடர்ந்து எரிந்து வருவதால் வனவிலங்குகளும், அரியவகை பறவை இனங்களும் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த தீயை ஒரு பகுதியில் வனத்துறையினர் அணைத்து வந்தாலும் மற்றொரு பகுதியில் காற்றின் வேகம் காரணமாக தொட‌ர்ந்து வேகமாக பரவி வருகிறது. 

இதனால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்