5 இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையன் கைது...!
போளூர் அருகே 5 இருசக்கர வாகனங்களை திருடி பதுக்கி வைத்திருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வசூர் கூட்டு சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், குடியாத்தம் காளப்புதூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் தமிழ்ச்செல்வன் (வயது39) என்பது தெரியவந்தது.
தமிழ்ச்செல்வன் பால் வண்டி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் போளூர் பகுதியில் 2, திருவண்ணாமலை பகுதியில். 1, காஞ்சிபுரம் பகுதியில் 1, சென்னை அம்பத்தூர் பகுதியில் 1 என்று மொத்தம் 5 இருசக்கர வாகனங்களை திருடியது தெரிந்தது.
பின்னர் அவர் பதுக்கி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.