மக்கள் நீதிமன்றத்தில் தோல்வி என்பதே கிடையாது ஐகோர்ட்டு நீதிபதி ராஜா பேச்சு

மக்கள் நீதிமன்றத்தில் தோல்வி என்பதே கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா பேசினார்.

Update: 2022-03-12 13:55 GMT
புதுச்சேரி
மக்கள் நீதிமன்றத்தில் தோல்வி என்பதே கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா பேசினார்.

மக்கள் நீதிமன்றம்

மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரியில்  நடந்தது. தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமை தாங்கினார். சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா கலந்துகொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் பேசியதாவது:-

உடனுக்குடன் தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. அடுத்தமுறை இது 300 ஆக குறையவேண்டும். ஒரு வழக்குகூட நிலுவையில் இல்லாத அளவுக்கு நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும்.
இந்த மக்கள் நீதிமன்றத்தால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக ஒரு அரசு அதிகாரி தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று வழக்கிற்கு சென்றால் வழக்கு நடைமுறைக்கு 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது.

தோல்வி கிடையாது

இதில் மேல்முறையீடு என்பதற்கு வாய்ப்பே இல்லை. பாகப்பிரிவினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கோர்ட்டு கட்டணம் என்று ஒன்று உள்ளது. அதுபோன்ற வழக்குகளில் அந்த கட்டணத்தை திரும்பப்பெற முடியாது. ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் அதை திரும்பப்பெறலாம்.
அதுமட்டுமின்றி மக்கள் நீதிமன்றத்தில் ஒரு தரப்புக்கு வெற்றி என்ற நிலை கிடையாது. அதாவது இருதரப்புக்கும் தோல்வி என்பதே கிடையாது.
இவ்வாறு ஐகோர்ட்டு நீதிபதி ராஜா பேசினார்.
நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், துணைத்தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்