கிரெடிட் கார்டு மோசடி; தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 86 ஆயிரம் அபேஸ்...!
கிரெடிட் கார்டு உச்சவரம்பை உயர்த்தி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 57). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சதீசுக்கு சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் அதிகாரியாக நான் பணியாற்றி வருகிறோன். நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டின் பண உச்சவரம்பை உயர்த்தி தரப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
அதனை உண்மை என்று நம்பி சதீஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர் கேட்ட பல்வேறு தகவல்களை சதிஷ் தனது செல்போன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இது போன்று கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களையும் சதீஷ் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.86 ஆயிரத்து 369 பரிபோனது என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதிஷ், அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அந்தமர்ம நபர் செல்போனை எடுக்கவில்லை.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.