தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 19 ஆயிரம் அபராதம்...!

ஊட்டியில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளிடம் இருந்து ரூ. 19 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-03-12 09:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்தநிலையில் இன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நீலமேகம் தலைமையில் குழுவினர் ஊட்டி பிங்கர்போஸ்ட், ரோகிணி சந்திப்பு, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 5 கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த  2.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 4,800 அபராதம் விதித்தனர்.

இது போன்று குன்னூர் நகராட்சியில் மவுண்ட் ரோடு, பெட்போர்டு பகுதிகளில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையில் குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 9 கடைகளில் இருந்து 7.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். 

இந்த சோதனையில் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 19 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்