உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை வரவேற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் கடைசி குழுவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை,
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். உக்ரைனிலிருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்காக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட திமுக எம்.பி. திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழு, இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்தது. தமிழகம் வந்த மாணவர்கள் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவர்களின் பயணம் மற்றும் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது பேசிய திருச்சி சிவா, இந்த காலத்தில் மாணவர்கள் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளனர். குறிப்பாக மொழி பிரச்சினையை சந்தித்தனர். உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்தவுடன் தமிழக அரசு அதிகாரிகள் உதவினர் என்று கூறினார்.