ஆடுதுறை பேரூராட்சியில் தேர்தல் ரகளை தொடர்பான வீடியோவை தாக்கல் செய்ய வேண்டும்

ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4-ந்தேதி நடந்த தேர்தல் ரகளை தொடர்பான வீடியோ பதிவை தாக்கல்செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-11 21:41 GMT
சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு கடந்த 4-ந்தேதி நடைபெற இருந்த தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் தி.மு.க. கவுன்சிலர் ரகளையால் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தேர்தலை நடத்தக்கோரி இந்த பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 8 கவுன்சிலர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது பேரூராட்சி தேர்தல் அதிகாரி வழக்கிற்கு விளக்கம் அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பு வக்கீல் கூறினார்.

அவமதிப்பு வழக்கு

இதையடுத்து தேர்தல் அதிகாரிக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரூராட்சி தேர்தல் அதிகாரி இளவரசன் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடத்தப்படும் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

வீடியோ பதிவு

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்துவிட்டு, தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து விசாரணையை 15-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கடந்த 4-ந்தேதி நடந்த தேர்தல் ரகளை தொடர்பான வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு பேரூராட்சி தேர்தல் அதிகாரி இளவரசன் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்