புதுவையில் இந்த மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம்
புதுவையில் இந்த மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதுச்சேரி
புதுவையில் இந்த மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
பட்ஜெட் தாக்கல்
புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இல்லை. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
ரங்கசாமி முடிவு
அதற்கேற்ப ஒவ்வொரு துறைகளிலும் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான பணிகளும் நடந்து வந்தன. மத்திய அரசின் மானியமும் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ரூ.1,729 கோடி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மாதத்துக்குள் புதுவை அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற முடியாது என்று தெரிகிறது. எனவே மீண்டும் கடந்த காலங்களைப்போல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்
அதாவது 6 மாத காலத்துக்கு அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல்பெற (இடைக்கால பட்ஜெட்) திட்டமிட்டுள்ளார். அதன்பின் ஓரிரு மாதங்கள் கழித்து முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் மேலும் ஓரிரு மாதங்கள் கழித்துதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.