மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை நம்மை பழைய நிலைக்கு அழைத்து செல்கிறது

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை நம்மை பழைய நிலைக்கு அழைத்து செல்கிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.

Update: 2022-03-10 20:42 GMT
சென்னை,

மணியம்மையாரின் 103-வது பிறந்தநாளையொட்டி சென்னை வேப்பேரி ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் அமைந்துள்ள, மணியம்மையாரின் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சியில், கி.வீரமணி எழுதிய ‘பெரியார் மணியம்மை திருமணம்’ புத்தகத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தை கி.வீரமணி வெளியிட, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைத்தலைவர் கலிபூங்குன்றன், துணை பொதுச்செயலாளர் இன்பகனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

‘நீட்’ தேர்வு

நாடு முழுவதிலும் இருந்து மருத்துவம் பார்க்க மக்கள் நம்பிக்கையுடன் வரக்கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் தரமான கல்வி இல்லை என சொல்லி ‘நீட்’ போன்ற நுழைவு தேர்வுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளிலேயே நம் மாணவர்கள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

தற்போது மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திடங்களை வைத்து, நம்மை மீண்டும் பழைய நிலைக்கு அழைத்து செல்கிறார்கள். மேலும், மத்திய அரசு மக்களிடம் இருந்தும், மாநிலங்களிடம் இருந்தும் உரிமைகளை பறித்து கொண்டிருக்கிறது.

களத்தில் இறங்கி பணிபுரிய வேண்டும்

உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அவர்கள் வெற்றி வாகையும் சூடியிருக்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, களத்தில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும். இதில் கடமையை செய்ய தவறினால், எதிர்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்