“சட்டம், ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்” - கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு
முதல்-அமைச்சர் தலைமையிலான மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று தொடங்கியது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டம், ஒழுங்கு விஷயத்தில் ஒருப்போது சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
இன்று தொடங்கி 3 நாட்களில் நடக்கும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். இன்று காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 6.30 மணி வரை போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த விரிவான ஆய்வை முதல்-அமைச்சர் மேற்கொள்ள உள்ளார். வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.