பல்கலைக்கழக ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதா? - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி

பல்கலைக்கழக ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதா என தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-03-09 08:51 GMT
சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கி விட்டு, அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் புதிய ஊழியர்களை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்தர் பணி, ஆய்வக உதவியாளர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 400 பணியாளர்களை தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவுட்சோர்சிங் அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதே 'உழைப்புச் சுரண்டல்' என்பது ஒருபுறமிருக்க, அண்ணா பல்கலைக்கழகத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டால், அங்கு ஏற்கனவே பணியாற்றிவரும் 400க்கும் மேற்பட்டோர் வேலையிழப்பர்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 4 வளாகத்திலும் பணியாற்றி வரும் அவர்களில் பலர் 20 ஆண்டுகளாக அதே நிலையிலேயே உள்ளனர். அண்ணா பல்கலை.யில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதற்கானத் திட்டத்திற்கு 'கலைஞர் அய்யா திட்டம்' என்று பெயரிட்டுக் கொள்ளலாம் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை பணி நீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம்? அவ்வாறு செய்தால் 400 பணியாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும் என்ற மனிதநேயம் கூட பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இல்லையா? இந்த முடிவை அண்ணா பல்கலை. கைவிட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் 439 பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் கடந்த மாதம் நியமித்துள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமைகளுக்கு எதிரான அணுகுமுறை ஆகும்.

அவுட்சோர்சிங் என்பது பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு 400 பணியாளர்கள் தேவை என்றால், அவர்கள் அனைவரையும் ஒரு தனியார் மனிதவள நிறுவனம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கும். அந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,000, தினசரி ரூ.410, ரூ.470, ரூ.477 என அவர்களின் பணிக்கு ஏற்ப ஊதியத்தை நிர்ணயித்து அதை அவுட்சோர்சிங் நிறுவனம் பெற்றுக் கொள்ளும். ஆனால், அந்த ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்காது; அதில் பாதிக்கும் குறைவான ஊதியம் மட்டுமே வழங்கப் படும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவார்கள்.

அரசு என்பது வணிக நிறுவனம் அல்ல... மக்கள் நலன் காப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசு லாப, நட்டக் கணக்குகளைப் பார்க்கக்கூடாது. பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டால் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. அத்தகைய பொறுப்பு கொண்ட அரசாங்கமே, அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது.

முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை உள்ளிட்ட பொதுத்துறைகளில் அவுட்சோர்சிங் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதை கடுமையாக எதிர்த்து 27.11.2017 அன்று அறிக்கை வெளியிட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ''அவுட்சோர்சிங் அடிப்படையில் தனியார் ஏஜன்சிகளின் மூலம் வெளிப்பணியாளர்களை நியமித்து, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தையே கைவிட்டு விடுவதுபோல் இந்த ஆட்சி வேலைவாய்ப்பற்றுத் தவித்து வரும் இளைஞர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி அராஜகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7 அல்லது 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கிவிடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் தாண்டவமாடுகிறது'' என்று விமர்சித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அதே கொத்தடிமை முறையை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் அறிமுகப்படுத்துவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. கடந்த சில மாதங்களில் தமிழக பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள காலியிடங்கள் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தினக்கூலி ஊழியர்கள் பணிநிலைப்பு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்