'போரை நிறுத்துங்கள் புதின்' - கவிஞர் வைரமுத்து டுவீட்

உக்ரைன் மீதான போரை புதின் நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-09 04:49 GMT
சென்னை,

உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா அதிபர் புதின் நிறுத்த வேண்டும் என தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'போரை நிறுத்துங்கள் புதின்

மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்

கரும்புகை
வான் விழுங்கும்

பகலை
இருள் குடிக்கும்

கடல்கள் தீப்பிடிக்கும்

குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்

ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்

போரை நிறுத்துங்கள் புதின்’

என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்