கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரம் இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை,
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 10 பேர் இன்று மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாங்கள் நிரபராதிகள், எந்த குற்றமும் செய்யவில்லை" நீதிபதி சம்பத்குமார் முன்பு குற்றவாளிகள் யுவராஜ் உள்பட 10 பேரும் தெரிவித்துள்ளனர்
என் மகனுக்கு நேர்ந்தது போன்ற கொடுமை யாருக்கும் நடக்ககூடாது” என கோகுல் ராஜின் தாய் சித்ரா நீதிபதியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, கோகுல்ராஜ் கொலை திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்பட்டு தற்கொலை போல ஜோடிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கோகுல் ராஜ்க்கு மட்டும் எதிரானது அல்ல, சமூகத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் இறுதி வாதம் செய்தார்.
பின்னர் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையொட்டி பிற்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி சம்பத் குமார் அறிவித்துள்ளார்.
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவகாரத்தை அறிவிக்கிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.