மதுக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்
காலாப்பட்டு அருகே மதுக்கடையை அகற்றக்கோரி மனித உரிமைகள் சர்பில் சாலை மறியல் நடந்தது.
புதுவை காலாப்பட்டு அடுத்த கனகக்செட்டிகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மதுபானக்கடை உள்ளது. இங்கு மது குடிப்பவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பல்வேறு வகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து மனித உரிமைகள் அமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் செய்யாலு தலைமையில் மதுக்கடை முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். திடீரென்று அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காலாப்பட்டு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடையை அகற்ற உயர்அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதன்பேரில் மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.