உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர ரூ.3½ கோடி ஒதுக்கீடு - அரசு உத்தரவு
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழர்களை அழைத்து வர ரூ.3 கோடியே 50 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை,
உக்ரைனில் இருந்து மாணவர்களையும், வெளிநாடு வாழ் தமிழர்களையும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில பிரதிநிதிகளை கடந்த 4-ந் தேதியன்று அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
மாணவர்களின் பயண செலவு, ஏற்பாடு, உணவு செலவு ஆகியவற்றை அவர்கள் வீடுகள் செல்லும் வரை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக 4 நாடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
மேலும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உள்பட வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்டுகொண்டு வரவேண்டி இருக்கிறது. இதற்காக உடனடியாக ரூ.2 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து அவற்றை ஏற்றுக்கொண்டு, இதற்காக ரூ.3 கோடியே 50 லட்சத்தை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.
அதன்படி, டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கு விமான கட்டணமாக ரூ.2 கோடியும், சாலை மார்க்கமாக விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு வருவதற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயண செலவுகளுக்கும், உக்ரைனில் உள்ள மாணவர்களை அங்கிருந்து அந்த நாட்டுக்கு அருகில் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு வருவதற்கான பயண செலவுகளையும் சேர்த்து ரூ.1 கோடியே 50 லட்சமும் செலவிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.