உக்ரைன் போர் முனையில் சென்னை மருந்து கம்பெனி அதிபரின் ‘திக் திக்’ நிமிடங்கள்
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் முன் சென்னையை சேர்ந்த மருந்து கம்பெனி அதிபர் போர் முனையில் தனது ‘திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
குறிப்பாக உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கணிசமான அளவில் இருக்கும் நிலையில் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டுவரும் முயற்சியில் தமிழக அரசும் ஈடுபட்டுள்ளது.
ரஷிய படைகளின் மூர்க்கத்தனமாக தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் எல்லைகளை கடந்து அண்டை நாடுகளுக்கு வந்து இந்திய விமானங்களில் ஏற வேண்டிய சூழல் உள்ளது. இதில் அவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவரின் ‘திக் திக்’ நிமிடங்கள்
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வசிக்கும் சென்னையை சேர்ந்த தாமரை பாண்டியன் (வயது 60) என்ற மருந்து கம்பெனி அதிபர், 1.300 கி.மீ. காரில் பயணம் செய்து அண்டை நாடான போலந்தை அடைந்து, அங்கிருந்து நேற்று முன்தினம் தாயகம் புறப்பட்டார்.
போலந்து தலைநகர் வார்ஷாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்தபோது, ‘தினத்தந்தி' நிருபர் அவரிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் உக்ரைன் போர் முனையில் தனது ‘திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-
மருந்து கம்பெனி அதிபர்
எனது மனைவி சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். நான் லயோலா கல்லூரியில் படித்தவன். சென்னையில் மருந்துகம்பெனி பிரதிநிதியாக பணிபுரிந்த நான், கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் சென்றேன். அங்குள்ள மருந்து கம்பெனியில் வேலை பார்த்தேன். பிறகு, நானே சொந்தமாக மருந்து கம்பெனி தொடங்கி நடத்தி வருகிறேன்.
எனக்கு அனிதா என்ற மனைவியும், லெஸ்லி என்ற மகனும் உள்ளனர். மகன் லெஸ்லி அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். எனது மனைவி என்னுடன்தான் உக்ரைனில் இருந்தார். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நாங்கள் இருவரும் சென்னை வருவது வழக்கம். இந்த முறையும் அதுபோல் வந்தோம். பிறகு, நான் மட்டும் உக்ரைன் திரும்பினேன். எனது மனைவி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளார்.
அலாரம் மூலம் அபாய எச்சரிக்கை
இப்போது, உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவருகிறது. இதுபோன்றதாக்குதலை உக்ரைன் மக்கள் இதுவரை கண்டதில்லை. அரசு அலுவலகங்களையும், அரசுக்கு தொடர்புடைய இடங்களையும் குறிவைத்து ரஷியா தாக்கி வருகிறது. ஆனால், சில குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள்ளும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் கீவ் நகரில் 22 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். ஏவுகணைகள் வான்வழியாக சீறிப்பாய்ந்து செல்லும் காட்சியை நேரடியாக பார்த்திருக்கிறேன். உக்ரைன் எல்லைக்குள் ரஷியா போர் விமானங்கள் வந்தால், உடனடியாக நகர் முழுவதும் அலாரம் மூலம் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்படும். உடனே, அனைவரும் குடியிருப்பின் தரைத்தளத்திற்கு சென்று பாதுகாப்பாக இருந்து கொள்வோம். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருந்தது.
போலந்து எல்லை நோக்கி...
இந்தியாவில் இருந்தும், குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் நிறைய மாணவர்கள் உக்ரைனில் தங்கி படித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, அந்த மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் விடுதிகளிலேயே தங்கியிருக்கின்றனர். நாடு திரும்ப நினைக்கும் மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
எனது குடும்பத்தினர் அழைத்ததன் பேரில் நானும் நாடு திரும்ப விரும்பினேன். இதற்காக, கீவ் நகரில் இருந்து போலந்து நாட்டின் எல்லையை நோக்கி எனது காரிலேயே புறப்பட்டேன். மொத்தம் 680 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு போலந்து எல்லையை அடைந்தேன். அருகில் எனக்கு தெரிந்தவர் வீட்டிலேயே காரை விட்டுவிட்டு எல்லையை கடக்க காத்திருந்தேன்.
‘சாண்ட்விச்’ சாப்பிட்டேன்
அப்போது, உக்ரைன் நாட்டினர் என்னை போன்றவர்களுக்கு சாப்பிட ‘சாண்ட்விச்' கொடுத்தனர். வருபவர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், உக்ரைன் நாட்டின் மற்றொரு பகுதியில், வெளிநாட்டினர் தாக்கப்படும் சம்பவத்தையும் கேள்விப்பட்டோம். உக்ரைன் மக்களில் சிலர் உயிர் பயத்தில் இதுபோன்று நடந்துகொள்வதாக சொன்னார்கள்.
உக்ரைன் எல்லையில், உரிய சோதனைகளுக்கு பிறகு என்னை போலந்து நாட்டுக்குள் நுழைய அனுமதித்தனர். அங்கும் சோதனைகள் நடந்தது. அதன்பிறகு, 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவுக்கு காரில் சென்றேன்.
துபாய் வழியாக சென்னை பயணம்
தற்போது, இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில், இந்தியா திரும்ப விமானத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். துபாய் வழியாக சென்னை திரும்புவேன். என்னைப்போன்று நிறைய மாணவர்களும் நாடு திரும்ப இருக்கிறார்கள். அவர்களுக்காக, இந்திய அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.