தமிழக அமைச்சரவை கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொழில் வளர்ச்சி திட்டங்கள், ரூ.13,200 கோடியிலான புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விமானத்தில் புறப்பட்டனர்.
ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் மதுரையில் தரையிறங்கியது. இதனால் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.