செங்கல்பட்டு: மின் கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த லாரி - டிரைவர் உயிரிழப்பு...!

மறைமலைநகரில் லாரி மீது மின் கம்பி உரசிய விபத்தில் லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Update: 2022-03-05 11:10 GMT
வண்டலூர்,

திருவண்ணாமாலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 24), இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சி.எம்.டி.ஏ. தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இருந்து லாரியில் லோடு ஏற்றுவதற்காக இன்று வந்துள்ளார்.

டிரைவர் வசந்தகுமார் லாரியை பின்பக்கமாக இயக்கி உள்ளார்.  அப்போது  மின்சார டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் கம்பி லாரி மீது உரசி உள்ளது.

இந்த விபத்தில் லாரியில் மீது தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த டிரைவர் வசந்தகுமார் லாரியில் இருந்த கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் மீது தீ பற்றி எரிந்து உள்ளது. இதனால் வசந்தகுமார் வலியில் அலறி உள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர்.

பின்னர் இது தொடர்பாக மறைமலைநகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் டிரைவர் வசந்தகுமார் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மறைமலைநகர் போலீசார் டிரைவர் வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்