அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை தான் தேவை - அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா
அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை தான் தேவை என்று அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், திருச்செந்தூர் சென்ற சசிகலா, அங்கு ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் தங்கினார்.
அப்போது அதே விடுதிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் வந்தார். அவர், சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்து விட்டு, கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சசிகலா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.ராஜா நீக்கப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து ஓ.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை தேவை. எனது விருப்பபடியே சசிகலாவை சந்தித்தேன். சசிகலாவை நான் சந்தித்தது ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாது. அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே சசிகலாவின் விருப்பம்.
உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான் காரணம். கட்சியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. தற்போதைய நிலை நீடித்தால் கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும் என கூறினார்.