குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு...!
குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையை சேர்ந்த கூலி தொழிலாளி வேலுச்சாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவரது தந்தை மருதப்பன் (வயது 70) உடல்நிலை சரியில்லாததால் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக வேலுச்சாமி தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லா நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வேலுச்சாயின் வீட்டில் திடீரென தீப்பிடித்து உள்ளது.
அதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து மின்சார இணைப்பை துண்டித்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் வீட்டிலிருந்த டி.வி, மிக்சி, பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.