இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி மு க மனு ஏற்பு புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்

இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நடத்த மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-03-04 16:01 GMT
புதுச்சேரி
இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நடத்த மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 4-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

குளறுபடி

இத்தகைய சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வசதியாக மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டார். மேலும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். இதில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தது.
அப்போது வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை சரிசெய்து தேர்தல் அறிவிப்பினை வெளியிட ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

அறிவிப்பு ரத்து

இதனிடையே பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை தொடர்ந்து தேர்தல் நடத்த ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் தேர்தல் அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவ்வாறு பணிகள் நடந்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படாமல் இருந்து வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. தேர்தல் நடத்துவதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

விசாரணைக்கு ஏற்பு

இந்தநிலையில் சிவா எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவினை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை முடியும்வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை. இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
----====

மேலும் செய்திகள்