பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவி: அ.தி.மு.க ஆதரவுடன் அ.ம.மு.க.கைப்பற்றியது

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அ.ம.மு.க. மற்றும் தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் அ.ம.மு.க ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2022-03-04 09:23 GMT
தேனி,

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சிகள் தி.மு.க. 7 இடங்களையும், அ.ம.மு.க. 6 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்றியது. தலைவர் பதவியை கைப்பற்ற 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. இதனால் தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இடையே தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

இந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளராக 15-வது வார்டு கவுன்சிலர் பவானி அறிவிக்கப்பட்டார். இன்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் பவானி வேட்பு மனு தாக்கல் செய்தார். அ.ம.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு 11-வது வார்டு கவுன்சிலர் மிதுன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்.

பின்னர் வாக்குப்பதிவு நடந்தது. 15 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி 8 ஓட்டுகள் பெற்று, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் 7 ஓட்டுகள் வாங்கி தோல்வி அடைந்தார்.

இதன் மூலம் இந்த பேரூராட்சி தலைவர் பதவியை அ.ம.மு.க. கைப்பற்றியது. இது தி.மு.க.வினரிடம் ஏமாற்றத்தையும், அ.ம.மு.க.வினரிடம் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்