கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்டு அறிவிப்பு

அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று பொதுவாக உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-03 21:19 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் முறையான ஆடை அணியாமல், லுங்கி போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர். கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் ஆடை கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து கோவில்களின் முன்பும் அது தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை கோவிலில் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

அறிவிப்பு பலகை

இந்த வழக்கிற்கு, இந்து சமய அறநிலைத்துறை பதிலளிக்க ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில், அது தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் சில புகைப்படங்களை தாக்கல் செய்து, “கோவில்களுக்கு இந்துக்கள் அல்லாதோர் முறையற்ற வகையில் ஆடை அணிந்து வருகின்றனர். எனவே, ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு பலகையை அனைத்து கோவில்களிலும் வைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

முடியாது

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொருவிதமான ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவிலில் மட்டும் இதுபோன்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். அதேநேரம், அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரும் விதமாக, கோவில் நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்