விவசாயிகளுக்கு ரூ.7 கோடி மழை நிவாரணம்
புதுவையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிப்பு
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும், புதுவையிலும் வழக்கத்தைவிட அதிகமாக கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுவை, காரைக்காலில் வயல்களில் தண்ணீர் புகுந்து நெல் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. இதுகுறித்து அரசு தரப்பில் கணக்கெடுப்பு நடத்தியதில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அப்போது நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். மேலும் பிற பயிர்களுக்கு சேதத்துக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரூ.7 கோடி
இதுதொடர்பாக மத்திய பார்வையாளர்களும் வந்து மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனாலும் மழை நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது விவசாயிகளுக்கான மழை நிவாரண தொகையை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-22-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரணத்தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் அறிவித்தபடி விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 நிவாரணத்தொகை வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
7 ஆயிரம் விவசாயிகள்
இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை புதுச்சேரி பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200 ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியை சேர்ந்த 731 விவசாயிகளுக்கு ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 800-ம், ஏனாம் பகுதியை சேர்ந்த 231 விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 600-ம் விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.