3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு புதுச்சேரி காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் புதுச்சேரி, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் புதுச்சேரி, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுவை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
இதனால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் வரும் 3 நாட்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீன்பிடி படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சூறாவளி காற்று
இதன்படி வெள்ளிக்கிழமை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
சனிக்கிழமை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேத்திலும் இடையிடையே மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஞாயிற்றுக்கிழமை தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் பலமான காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
இதையொட்டி புதுவை துறைமுகம், காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. மீன்வளத்துறையினரும் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.