ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் அடித்துக்கொலை... சொத்து தகராறில் 10 பேர் கும்பல் வெறிச்செயல்
தலைவாசல் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் 10 பேர் கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி (வயது49) என்பவரிடம் 6½ ஏக்கர் நிலம் வாங்க வெங்கடாசலம் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதற்காக ரூ.82 லட்சம் விலை பேசி கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரூ.21 லட்சம் அட்வான்ஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ராமசாமி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்து அட்வான்ஸ் தொகையை வெங்கடாசலத்திடம் திரும்ப கொடுத்துள்ளார். அதன்பிறகு இருவருக்கும் அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ராமசாமிக்கு சொந்தமான மக்காச்சோள பயிர்களை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ராமசாமி தலைவாசல் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ராமசாமி, அவருடைய அக்காள் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் பூவாயி(66) மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கும்பல் ராமசாமி வீட்டுக்கு வந்தது. அந்த கும்பல் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு ராமசாமி, அவருடைய அக்காள் உள்ளிட்டவர்களை சரமாரியாக தாக்கியது.
இந்த கொடூர தாக்குதலில் ராமசாமியும், பூவாயியும் படுகாயம் அடைந்தனர். அந்த கும்பல் அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும், வீட்டையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றது. சினிமாவை போல் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பூவாயி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வெங்கடாசலத்திடம் விசாரணை நடத்த சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.