பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில்... 2 கல்லூரி மாணவிகளுக்கு தொடர்பு...

பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு தொடர்பு இருக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.

Update: 2022-03-03 07:56 GMT
பூந்தமல்லி, 

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பல் மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த்கிரிஷ் (வயது 20) மற்றும் அவரது நண்பர்களான கல்லூரி பேராசிரியர், துணை நடிகர், மற்றொரு கல்லூரி மாணவர் என 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கல்லூரி மாணவிகள் உள்பட 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து கல்லூரி மாணவிகள் 2 பேரை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். மாணவியின் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால் பெற்றோர் அரவணைப்பு இல்லாததால் மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பிளஸ்-2 மாணவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர், கிரிக்கெட் விளையாட செல்லும் இடத்தில், தற்போது கைதான 4 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவன், வசந்த்கிரிஷ்க்கு மாணவியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு வசந்த்கிரிஷ் மாணவியுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகத் தொடங்கினார்.

மேலும் வீட்டில் தனியாக தங்கி படித்து வந்த வசந்த்கிரிஷ், அவ்வப்போது மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று ‘ஹூக்கா’ போதை பொருளை முதலில் சுவைக்க கொடுத்து, நாளடைவில் அடிமையாக்கிவிட்டார். அதன்பிறகு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். பின்னர் நண்பர்களின் காம பசிக்கும் மாணவியை விருந்தாக்கினார்.

வசந்த்கிரிஷின் நண்பரான சதீஷ்குமார், சினிமா துணை நடிகராகவும், தனியார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் இளம்பெண்களை வைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியும் வந்தார். அவரிடம் கல்லூரி மாணவிகள் 2 பேர், பகுதி நேரமாக நிகழ்ச்சிகளுக்கு நடனமாடி வந்தனர்.

அவர்களையும் வசந்த்கிரிஷ் வீட்டுக்கு அழைத்து வந்து விடிய, விடிய நடனமாடி, போதை பொருள் பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதில் ஒரு கல்லூரி மாணவியிடம் சதீஷ்குமார் நெருக்கமாக பழகி வந்தார். அந்த புகைப்படத்தை மாணவியிடம் காண்பித்து, கல்லூரி மாணவிகள் இருவரும் பள்ளி மாணவியை மூளை சலவை செய்தனர்.

பெற்றோரின் அரவணைப்பு இல்லாததால் கல்லூரி மாணவிகளின் பேச்சுக்கு மயங்கிய மாணவி, அதன்பிறகு போதை பழக்கத்துக்கும், இவர்களின் காம இச்சைக்கும் பலியாகி விட்டார். அத்துடன் இவர்களிடம் நல்ல பணப்புழக்கமும் வித, விதமான போதை பொருட்களை வீட்டுக்கே வரவழைத்து புகைத்து உல்லாசம் அனுபவித்தனர். இதுவும் மாணவியை கவர்ந்துவிட்டது.

2 மாதமாக மாணவியை போதைக்கு அடிமையாக்கி உல்லாசம் அனுபவித்துள்ளனர். மாணவி எந்த வகையிலும் கர்ப்பம் ஆகி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மாத்திரைகளையும் கொடுத்து உல்லாசமாக இருந்த அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.

கைதான 4 பேர் மட்டுமின்றி, விசாரணையில் உள்ள 2 கல்லூரி மாணவிகளின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த வழக்கில் சிக்கிய கல்லூரி மாணவிகள் மீது என்ன மாதிரியான வழக்குப்பதிவு செய்யலாம்? என உயர் அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்