சினிமா தயாரிப்பாளர், குவாரி அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை

சினிமா தயாரிப்பாளர், குவாரி அதிபர் வீடு, அலுவலகங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-03-02 18:48 GMT
சென்னை,

வருமானவரித்துறைக்கு வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் மற்றும் குவாரி அதிபருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான தொழிலதிபர் ஏ.வி சாரதி என்பவர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான குவாரி மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமானவரி சோதனை நடந்தது.

இவர், சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர். இவருக்கு சொந்தமான சென்னை, ராணிப்பேட்டையில் உள்ள அலுவலகங்களில் பல்வேறு குழுக்களாக அதிகாரிகள் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். 15 கார்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வந்திறங்கிய அதிகாரிகள், குவாரி, சிமெண்டு குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பெரியமேடு, புரசைவாக்கம், மேடவாக்கம், சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடந்தது.

சினிமா தயாரிப்பாளர்

அதேபோல், சென்னை புரசைவாக்கம் ரித்தர்ட்டன் சாலையில் உள்ள சுப்பையா தெருவை சேர்ந்த பைனான்சியர் சுரேஷ் லால்வானி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், வேப்பேரி ஜெர்மையா சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சுதேஷ் லால்வானியின் மகன் சுனில் லால்வானி வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

கோ மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளரும், கல்குவாரி அதிபருமான எல்ரெட் குமாரின் சென்னை தியாகராயநகர், பகவானந்தம் தெருவில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் தியாகராயநகர் ராஜா தெருவில் உள்ள கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

பல ஆண்டுகளாக குவாரி தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் பெறப்பட்டு உள்ளது. பள்ளிக்கரணை, ஈச்சங்காடு, எருமையூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கியமான ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் சிக்கி உள்ளன. இவற்றினுடைய மதிப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட ரொக்கம் எவ்வளவு? என்ற தகவல்கள் வருமானவரி சோதனை நிறைவடைந்த பின்னரே தெரியவரும். தேவைப்பட்டால் வருமானவரி சோதனை தொடரவும் வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட தகவல்களை வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்