வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ 10 ஆயிரம் சம்பளம் முதல் அமைச்சர் ரங்கசாமி படத்துடன் ஊழியர்கள் செடல் ஊர்வலம்

வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க ஆணையிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி படத்துடன் ஊழியர்கள் செடல் ஊர்வலம் சென்றனர்.

Update: 2022-03-02 17:46 GMT
புதுச்சேரி
வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க ஆணையிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி படத்துடன் ஊழியர்கள் செடல் ஊர்வலம் சென்றனர்.

ரூ.10 ஆயிரம் சம்பளம்

புதுவை பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு நடந்த சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் 1,378 பேருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாரயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் நேரு, பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

செடல் ஊர்வலம்

10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர், முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோருக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவிக்க முடிவு செய்தனர். அதன்படி மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் அவர்கள் ஒன்று கூடினர். முதல்-அமைச்சர் ரங்கசாமியின் உருவப்படத்தை ஒரு ஜீப்பில் வைத்து 2 பேர் செடல் குத்தி ஊர்வலமாக இழுத்து சென்றனர். ஊழியர் ஒருவர் உடல் முழுவதும் அலகு குத்தியிருந்தார்.
இந்த ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி வழியாக மணக்குள விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் பெயரில் சிறப்பு தரிசனம் செய்தனர். ஊர்வலத்தில் ஏராளமான வவுச்சர் ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்